கோல் அடித்த உற்சாகத்தில் கனடா அணி வீரர்கள் 
உலகம்

ஆறு கோல் போட்ட கனடா அணியின் அசத்தலான ஆட்டம்!

Staff Writer

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில், 'ஏ' பிரிவு அணிகளுக்கு இடையிலான போட்டியில் செக்குடியரசு, தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் செக்குடியரசு ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியும் கோல் அடித்தது. இதனால், போட்டி டிராவில் முடிந்தது.

குரூப் 'பி' பிரிவில் சுவிட்சர்லாந்து, போஸ்னியா அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணி தனது தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 4 கோல்கள் அடித்தது. போஸ்னியா அணியும் தனது 90ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால், 4-1 என்ற புள்ளிக்கணக்கில் சுவிட்சர்லாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக, குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா, கத்தார் அணிகள் மோதின. இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டி வந்த நிலையில், கனடா அணி முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 3 கோல்கள் அடித்து அசத்தியது. கத்தார் அணியின் முயற்சிகள் அனைத்தையும் கனடா அணி முதல் பாதியில் முறியடித்தது.

போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கத்தார் அணியின் முகமது மனாய் அடித்த 'செல்ஃப் கோலால்', கனடா அணிக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது.

இறுதி நிமிடத்தில் கனடா அணியின் ஜொனாதன் டேவிட் தனது 3ஆவது கோலை பதிவு செய்து ஹாட்ரிக் சாதனையை படைத்தார். இதனால் கனடாவின் கோல் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

போட்டியின் முடிவில், 6-0 என்ற கோல் கணக்கில் கனடா அணி வெற்றி பெற்றது. இதனால் குரூப் 'பி' பிரிவில் கனடா அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

அடுத்ததாக , குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ, தென்கொரியா அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், 0-0 என்ற புள்ளிக்கணக்கில் முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ அணி ஒரு கோல் அடித்தது. மேலும், தென்கொரியா அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் மெக்சிகோ அணி தற்காத்தது.

இதனால், போட்டியின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இப்போட்டியை வென்றதுடன் குரூப் 'ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram