ஐரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து தாக்கிவருகின்ற கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால் போர்ச்சுகல் முழுவதும் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
நாட்டின் ஏராளமான பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், வறண்ட காலநிலை, பலத்த காற்று காரணமாக தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால் வடக்கு, மத்திய போர்ச்சுகலின் வனப்பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன.
குறிப்பாக விசேயு மாவட்டத்தின் வௌசேலா உட்பட்ட பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 2,800-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 800-க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஏராளமான தீயணைப்பு விமானங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இருப்பினும், அதிக வெப்பம், பலத்த காற்று காரணமாக தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலைமை தீவிரமானதைத் தொடர்ந்து, போர்ச்சுகல் அரசு ஸ்பெயின், மொராக்கோ ஆகிய நாடுகளிடம் கூடுதல் தீயணைப்பு விமானங்கள், அவசர உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
காட்டுத்தீயின் பரவல் அதிகரித்து வருவதால் பல பகுதிகளில் அவசர எச்சரிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தீ பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அடுத்த சில நாள்களும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.