கான் யூனிஸ் நகரில் பாலஸ்தீனத்து மக்கள் ஆர்ப்பரித்த காட்சி 
உலகம்

காசா போர் நிறுத்தம் - இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு! நடந்தது என்ன?

Staff Writer

இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட பாலஸ்தீனத்தின் மீதான போர் ஒருவழியாக இன்றுதற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

இஸ்ரேல், காசாவைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் என இருதரப்புகளும் அமைதிக்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.  

அவர் தன்னுடைய ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த அமைதி முயற்சிக்காகப் பணியாற்றிய கத்தார், எகிப்து, துருக்கி அரசுத் தரப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும், கான்யூனிஸ் உட்பட்ட பாலஸ்தீனத்துப் பகுதிகளில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோதும், இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலத்துக்குப் பிறகு டிரோன்கள், ஏவுகணைகள், வெடிகுண்டுகள் சத்தமில்லாத இரவுப் பொழுதை அவர்கள் நிம்மதியுடன் அனுபவித்தனர்.

பேச்சுவார்த்தை முழுவிவரம்

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி  1200 பேரைக் கொன்றதுடன் 250 பேரைக் கடத்திச்சென்றது. இதைத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இரண்டாண்டு போரில் காஸா கடுமையாகப் பாதிக்கப்பட்ட து. 67000 பேர் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களும் ஹமாஸ் வீர்ர்களும் அடங்குவர்.

இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர செய்யப்பட்ட எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9 அன்று கத்தார் நாட்டுக்குள் இருந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நட த்தியது. இதை அடுத்து பொறுத்ததுபோதும் என அரபு நாடுகளும் அமெரிக்காவும் தீவிரமாகக் களமிறங்கின. ட்ரம்ப் வெளிப்படையாகவே தன் கோபத்தைக் காட்டினார். இஸ்ரேல் அதிபர் நதான்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து போர்நிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கச் செய்தனர்.

செப்டம்பர் இறுதி வெள்ளிக்கிழமையில் நதான்யாகுவுடன் பேச்சுவார்த்தை நட த்தி 20 அம்சப் போர்நிறுத்த திட்டத்தை ட்ரம்ப் அறிவித்தார். இதை ஏற்றுக்கொள்வதுதான் ஹமாஸுக்கு ஒரே வழி. இல்லையெனில் ஒழித்துக் கட்டிவிடுவேன், ரத்த ஆறு ஓடும் என எச்சரித்தார். இதையடுத்து ஹமாஸ் பணைய கைதிகளை விடுவிக்க ஒப்புதல் தெரிவித்து, அமைதித் திட்டத்தில் சில அம்சங்களை விவாதிக்க விரும்புவதாக் கூறியது. ஹமாஸ் அமைதியை விரும்புவதாக நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், இஸ்ரேல் உடனடியாகக் குண்டுவீச்சை நிறுத்தவேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து எகிப்தில் உள்ள ஷார்ம் எல் ஷேக் நகரில் ஹமாஸ் பிரதிநிதிகள், அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப், ட்ரம்பின் மருமகனும் இப்பிராந்தியம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், நதான்யாகுவின் ஆலோசகர் ரான் டெர்மர், கத்தார் நாட்டின் பிரதமர் ஆகியோர் பங்குபெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இரு ஆண்டுகளுக்கு முன்னால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சுமார் 20 பேர் உயிருடன் உள்ளனர். அவர்களைத்திருப்பித் தரவேண்டும். மேலும் இறந்துபோன 28 பேரின் உடல்களையும் அளிக்கவேண்டும். ஹமாஸ் தரப்பில் பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 250 பாலஸ்தீனர்கள், இந்த போரின்போது சிறையில் தள்ளப்பட்ட 17000 காசா குடிமக்கள் ஆகியோரை விடுவிக்கவேண்டும். இது அமெரிக்க அதிபர் வெளியிட்ட 20 அம்ச திட்டத்தில் இடம் பெற்று இருந்து. தற்போது இதற்கான ஒப்பந்தம் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து காஸா பகுதிக்குள் சர்வதேச உணவு உதவிகள் அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பிணைக் கைதிகள் அனைவரும் வீடு திரும்புவர் என்று இதைத் தொடர்ந்து நதான்யாகு அறிவித்தார். ஒப்பந்தத்தின் பிற அம்சங்கள் பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

தற்போது கைதிகள் பரிமாற்றம் பற்றிய ஒப்புதல் மட்டுமே நிகழ்ந்துள்ளது. போர் நிற்குமா எனத் தெரியவில்லை. ஹமாஸ் ஆயுதங்களைக் கீழேபோடவேண்டும் என நதான்யாகு வலியுறுத்துகிறார். ஆனால் ஹமாஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ட்ரம்ப் முன்வைத்த திட்டப்படி காஸாவில் இருந்து படைகளை இஸ்ரேல் பின்வாங்கவேண்டும். காஸாவில் பாலஸ்தீன நிபுணர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமைந்து நிர்வாகத்தைக் கவனிக்கும். சர்வதேச அமைதிப் பாதுகாப்புப் படை அனுப்ப்படும். ட்ரம்ப் தலைமையிலான ஒரு சர்வதேச அமைப்பு காஸா நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும். எதிர்கால அரசியல் அதிகாரத்தில் ஹமாஸ் தன் பங்கைத் துறக்கவேண்டும்.

இந்த அம்சங்களைத் தான் ஹமாஸ் மேலும் விவாதிக்க விரும்புகிறது. காஸாவில் ஆயுதங்களைக் கைவிடவோ, அதன் நிர்வாகத்தில் பங்கேற்காமல் இருக்கவோ ஹமாஸ் விரும்பாது. ஆகவே இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

காஸா மக்கள் போர் நிறுத்த நடவடிக்கையால் நிம்மதி அடைந்துள்ளனர். பெரும் துயரத்தில் இருந்தாலும் இழப்புகள் இனியும் தொடரக்கூடாது என்பதே அவர்கள் எண்ணமாக உள்ளது.