பசிபிக் பெருங்கடலில் அதிக வெப்பநிலை 
உலகம்

டிசம்பருக்குள் சூப்பர் எல்நினோ செய்யப்போகும் பயங்கரம்!

Staff Writer

பசிபிக் பெருங்கடலில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதால், தீவிர வெப்ப அலைகள், சக்திவாய்ந்த புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஆண்டில் 'எல்நினோ'வின் தாக்கத்தால் ஏராளமான உலக நாடுகள், குறைந்த அளவு மழை, அதிகப்படியான வெயிலின் தாக்கம், காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றங்களால் உலகநாடுகள் ஏற்கெனவே பாதிப்படைந்துவரும் நிலையில், தற்போது உள்ள 'எல்நினோ', 'சூப்பர் எல்நினோ'வாக வலுவடைய இருப்பதாக ஐரோப்பியாவின் 'கோப்பர் நிக்கஸ்' காலநிலை மாறுபாடு அமைப்பு, உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளன.

அண்மையில் இவை வெளியிட்ட தரவுகளில், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, சராசரியைக் காட்டிலும் மிக அதிகமாக பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளன.

இதற்கு முன்னர், கடந்த 2014ஆம் ஆண்டு, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகபட்சமாக 29.09 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்து.

ஆனால், தற்போது 29.70 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ள வெப்பநிலை, மத்திய பசிபிக் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியும் பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கான முக்கிய காரணமாக 'சூப்பர் எல்நினோ' கூறப்படுகிறது.

'எல்நினோ'வால் ஏற்பட்ட தாக்கங்களை விட இந்த 'சூப்பர் எல்நினோ'வின் தாக்கம், ஆண்டு இறுதிக்குள் உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் உலகின் ஏராளமான பகுதிகளில், கடுமையான வறட்சி, தீவிர வெப்ப அலைகள், குடிநீர் தட்டுப்பாடு, திடீர் வெள்ளப்பெருக்கு, சக்திவாய்ந்த புயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐரோப்பியாவின் 'கோப்பர் நிக்கஸ்' காலநிலை மாறுபாடு அமைப்பு, உலக வானிலை அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram