வட அட்லாண்டிக் கடலின் தீவு நாடான ஐஸ்லாந்து, பனிப்பாறை, பனி ஆறுகளுக்குப் பேர்போனது. இந்நாட்டில் 11 சதவீதம் பனியாறுகளால் நிரம்பியது என்பதால் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள்.
இதில், மிகப் பெரியது ஜோகுர்சர்லோன் லகூனை ஒட்டிய 3,050 சதுர கி.மீ. பரப்புடைய வட்னாஜோகுல் பனியாற்றுப் பகுதி. இப்படியான இடங்களிலிருந்துதான் ஐஸ்பெர்க் எனப்படும் பனிமலைகள் உருவாகும். இந்த வட்னாஜோகுலின் ஒரு முனைதான் ப்ரீடாமர்குர்ஜோகுல் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று ஒரு சுற்றுலாக் குழுவினர் சென்றுள்ளனர்.
அங்கிருந்த அழகிய பனிக்குகையை அவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பனிக்குகை அப்படியே இடிந்து நொறுங்கியதில் அவர்கள் அனைவரும் அதில் சிக்கிக்கொண்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆண் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஒரு பெண் பயணி தலைநகர் ரெய்காவிக்கிற்கு ஹெலிகாப்டரில் கூட்டிச்சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று ஐஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கருமையான பனிப்பாறைகள் சூழ்ந்த இரண்டு பள்ளங்களில் 200-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் அவர்களை மீட்பதில் ஈடுபட்டனர். இரவில் ஒரு கட்டத்துக்கு மேல் மீட்புப்பணியைத் தொடர்வது ஆபத்து என ஆகவே, நேற்று காலை 7 மணிக்கு மறுபடியும் அவர்கள் பணியைத் தொடங்கினர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் விழுந்த பனியை முழுவதுமாக அகற்றிய பின்னர், வேறு யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.
கோடை காலத்தில் இப்படி பனியாற்றுப் பகுதிகளில் சுற்றுலா செல்வது ஆபத்தானது என்றும் பனிக்குகைச் சுற்றுலாவை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ஐஸ்லாந்து மலைப்பகுதி சுற்றுலா வழிகாட்டிகள் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் லில்ஜா ஆல்பிரட்ஸ்டோட்டிர் தெரிவித்துள்ளார்.