உலக நாடுகளின் அமைதியான சூழலை மதிப்பீடு செய்யும் 2026ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இதில், தொடர்ந்து 19-வது ஆண்டாக ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட அந்த நாட்டின் அமைதித் தரம் 2% நடப்பு ஆண்டில் முன்னேறியுள்ளது.
இந்த ஆய்வை பொருளாதாரம்-அமைதிக்கான சர்வதேச ஆய்வு நிறுவனம், 2007 முதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. உலகின் 163 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இதில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
சமூகப் பாதுகாப்பு, குற்றச்செயல்கள், அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள், ராணுவமயமாக்கல் உட்பட்ட 23 தரவுக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
குறைவான குற்றச்செயல்கள், நிரந்தர ராணுவம் இல்லாதது, அரசியல் நிலைத்தன்மை, பயனுள்ள சமூக நலத் திட்டங்கள் ஆகியவை ஐஸ்லாந்தின் சாதனைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஐஸ்லாந்தை அடுத்து, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா, அயர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 127-வது இடத்தில் உள்ளது. எல்லைப் பதற்றங்கள், உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள், சமூகப் பாதுகாப்பு தொடர்பான காரணங்கள் இந்தியாவின் தரவரிசையைப் பாதித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
உலகின் மிகப்பெரிய ராணுவ சக்திகளில் ஒன்றான அமெரிக்கா 134ஆவது இடத்தில் உள்ளது. அதிக ராணுவமயமாக்கல், ஆயுதச் செலவுகள், வன்முறை குற்றங்கள், சமூகப் பதற்றங்கள் உட்பட்டவை அமெரிக்காவின் தரவரிசையை பாதித்த முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் ரஷ்யா உலகின் மிகவும் அமைதியற்ற நாடாக, 163ஆவது இடத்தில் உள்ளது. உக்ரைன் போரின் தொடர்ச்சி, ஆயுத மோதல்கள், பாதுகாப்பு நிலைமை மோசமடைதல் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
ரஷ்யாவைத் தொடர்ந்து சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உக்ரைன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன.