இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி 
உலகம்

பிரதமருக்கு 35ஆவது சர்வதேச விருது... பெங்களூர் ஐஐஎம்-ன் முதல் வெளிநாட்டு வளாகம்!

Staff Writer

இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பெங்களூர் ஐஐஎம் வளாகம் நிறுவப்படும் என்று தெரிவித்தார்.

மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று இந்தோனேசியாவுக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு குதிரைப்படை வீரர்களின் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு, அந்த நாட்டின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' என்ற விருது வழங்கப்பட்டது. அதை இந்தோனேசியாவின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை ஆகியவற்றுக்காகப் பங்களிப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது பிரதமர் நரேந்திர மோடி பெறும் 35ஆவது சர்வதேச விருதாகும்.

இந்தோனேசியா - இந்தியா இடையே கல்வி, சுகாதாரம் உட்பட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் வளாகத்தை இந்தோனேசியாவில் அமைக்கும் ஒப்பந்தமும் அடங்கும்.

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் உள்ள சிங்கசாரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐஐஎம் பெங்களூர் வளாகம் அமையவுள்ளது. இது இளைஞர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, அகமதாபாத் ஐஐஎம் நிறுவனம், துபாயில் ஒரு வளாகத்தை அமைத்துள்ள நிலையில், பெங்களூர் ஐஐஎம் தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை இந்தோனேசியாவில் தொடங்கவுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram