டொனால்ட் டிரம்ப் 
உலகம்

  ட்ரம்ப் அதிரடி: அமெரிக்க இந்தியர்கள் அவசர சிசேரியன் விருப்பம்!

Staff Writer

அமெரிக்க மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தானாகவே அந்நாட்டுக் குடியுரிமை உண்டு என்ற 150 ஆண்டுகள் பழமையான சட்டத்தை புதிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற கையுடன் அதிரடியாக ரத்து செய்துவிட்டார். இதற்கு சட்டரீதியாக எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தை பல தரப்புகள் அணுகி உள்ளன.

இந்த ரத்துச் சட்டம் வரும் பிப்ரவரி 19க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் இருக்கும் சட்டரீதியாக குடியுரிமை பெறாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை ரத்து செய்கிறது. இதைத் தொடர்ந்து அங்கே பணிபுரிவதற்காக ஹெச்1 பி விசாவில் சென்றுள்ள இந்தியர்கள் கவலை கொண்டுள்ளனர். இன்னும் கிரீன் கார்டு கிடைக்காத நிலையில் அல்லது கிரீன் கார்டு  விரைவில் கிடைக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் குழந்தைகளை அமெரிக்காவில் வளர்க்க நினைக்கும் எண்ணத்தில் இந்த குடியுரிமை கிடைக்காத நிலை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 7, 25, 000 இந்திய குடிமக்கள் அமெரிக்காவில் பதிவு செய்யப்படாத  குடியேறிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஹெச்1 பி விசாவில் இருக்கும் இந்தியர்களில் எட்டாவது, ஒன்பதாவது மாதத்தில் இருக்கும்  கர்ப்பிணிகள்,  இந்த சட்ட,ம் அமலுக்கு வருவதற்குள் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள  மருத்துவமனைகளை நாடுவதாக சொல்லப்படுகிறது.

குழந்தை முழு வளர்ச்சி அடைவதற்குள் சிசேரியன் செய்துகொள்வது நல்லதல்ல என மருத்துவர்கள் ஆலோசனை சொல்லிவருகிறார்கள்.