ஜான்சன் அண்டு ஜான்சன்  
உலகம்

ரூ.52,000 கோடி இழப்பீடு தர முன்வந்த ஜான்சன் & ஜான்சன் !

Staff Writer

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, பாதிக்கப்பட்ட 76,000 பேருக்கு இழப்பீடு வழங்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடர், டால்க் தயாரிப்புகள் கருப்பைப் புற்றுநோய், மீசோதெலியோமா உட்பட்ட நோய்களை ஏற்படுத்துவதாக உலகளவில் ஆயிரக்கணக்கானோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதை நிறுவனம் மறைத்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டினர்.

புற்றுநோயை உண்டாக்கும் அஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பது, நிறுவனத்திற்கு முன்னரே தெரியும் என்றாலும், அதை நிறுவனம் மறைத்ததாக செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாக இதைப் பயன்படுத்தியவர்களுக்கு கருப்பைப் புற்றுநோய், நுரையீரல் தொடர்பான மீசோதெலியோமா புற்றுநோய் ஏற்பட்டதாக பலர் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தன் மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தது. தங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, அஸ்பெஸ்டாஸ் அற்றவை என்றும் வாதாடி வந்தது.

உலகளவில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் மீது 90,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை முடிவிற்குக் கொண்டுவர ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் ரூ.29,000 கோடியை 2027-ஆம் ஆண்டிலும், எஞ்சிய தொகையை 2028-ஆம் ஆண்டிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram