சும்மா கண்டதுக்கெல்லாம் பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூட சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அன்றாடப் பாடம் முதல் ஆராய்ச்சிக் கட்டுரைவரை சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு(ஏஐ) செயலிகளைத்தான் ஏராளமானவர்கள் சார்ந்திருக்கிறார்கள்.
இவற்றின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, ஓப்பன் ஏஐ, ஆந்த்ரோப்பிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ ஆகிய செயலிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைத் தவிர, அந்தந்தத் துறை சார்ந்த ஏஐ செயலிகளும் உண்டு.
இந்தப் போட்டிச் சந்தையில் பேஸ்புக், வாட்சாப்பை நடத்தும் மெட்டா நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு கைபார்க்கிறேன் எனக் களம் இறங்கியிருக்கிறது.
மியூஸ் எனும் செயலியை அது உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் அனுப்புதல், இணையத்தில் படிவங்களை நிரப்புவது ஆகிய பணிகளை விரைந்து செய்யமுடியும் எனக் கூறப்படுகிறது. அறிமுகமான சில நாள்களிலேயே இது இலட்சக்கணக்கான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.