ஹூஸ்டன் விமான நிலையத்தில் காத்திருக்கும் விமான பயணிகள் 
உலகம்

அமெரிக்காவில் 1400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

Staff Writer

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான நிதி முடக்கத்தால் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்காவிலிருந்து செல்லும் அல்லது அமெரிக்காவுக்கு வரும் 1400க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அடுத்தாண்டுக்கான நிதியை விடுவிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரசுத் துறைகள் முடங்கின.

அதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய துறையில் பணிபுரியும் சுமார் 7 லட்சம் பேர் ஊதியமின்றி வேலைபார்க்கும் நிலையில் உள்ளனர்.

இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால், இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், ஊதியமின்றி குறைந்தளவிலான ஊழியர்களுக்கு கட்டளையிடப்பட்டாலும், அவர்களும் உடல்நலனைக் காரணங்காட்டி விடுப்பு எடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைக் குறைத்ததால், நேற்று மட்டும் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிகாகோ, ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர்.