குலிசெட்டா அன்னுலாட்டா கொசு 
உலகம்

வரலாற்றில் முதல்முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு!

Staff Writer

கடுங்குளிர்ப் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில் முதல்முறையாக கொசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் கொசுக்களே இல்லாத இரண்டு இடங்களாகக் கூறப்படுபவை, ஐஸ்லாந்தும் அண்டார்டிகாவும். இனப்பெருக்கம் செய்யத் தேவையான வெப்பநிலை, தேங்கி நிற்கும் தண்ணீர் இல்லாததால் அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்தன.

இந்த நிலையில், ஐஸ்லாந்து தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறைப் பள்ளத்தாக்கான கிஜோசில் இரண்டு பெண், ஒரு ஆண் கொசுக்கள் இருப்பதை ஹஜால்ட்சன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இதை அவர் ஐஸ்லாந்தின் இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு அனுப்பினார். அங்கு பூச்சியியல் வல்லுநர் அது 'குலிசெட்டா அன்னுலாட்டா' என்கிற ஒரு கொசு வகை என்பதை உறுதி செய்தார். இந்த இனங்கள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுபவை. இந்த கொசுக்கள் எப்படி ஐஸ்லாந்துக்கு வந்தன என்பது இன்னும் தெரியவில்லை.

பொதுவாக ஐஸ்லாந்து மே மாதத்தில் 20 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமான வெப்பநிலையை அரிதாகவே கொண்டிருக்கும். அந்த வெப்ப அலைகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால், இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 10 நாள்களுக்கு கடும் வெப்பம் நிலவியது.

எனவே கொசு இனத்தை உருவாக்கும் அளவுக்கு ஐஸ்லாந்து வெப்பநிலை மாறிவிட்டதா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்