மிஸ்டர் பீஸ்ட் என்றழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன், 500 மில்லியன் அதாவது 50 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் யூட்டியூபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
யூ டியூபில் அதிக சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் இருந்த பியூடிபை, இந்தியாவின் டி-சீரிஸ் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு மிஸ்டர் பீஸ்ட் முன்னேறியுள்ளார்.
இந்த சாதனைக்காக யூ டியூபின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன், மிஸ்டர் பீஸ்டுக்கு ஒரு பிரத்யேக 'ப்ளே பட்டனை' வழங்கி கௌரவித்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் 2012-ல் தனது 13-வது வயதில் யூ டியூபில் முதன்முதலாக இணைந்தார். ஆரம்பத்தில், கேமிங் உள்ளடக்கங்கள், ரியாக்ஷன் வீடியோக்கள், யூடியூப் ட்ரெண்டுகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது 27 வயதாகும் மிஸ்டர் பீஸ்ட், பணப் பரிசுகள், பெரிய அளவிலான போட்டிகள், சவால்கள், தொண்டுத் திட்டங்கள், சுயமுன்னேற்ற வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிடுவதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
யூ டியூப் வரலாற்றில் இந்தச் சாதனையைப் புரிந்த ஒரே, முதல் நபர் என்ற பெருமையை மிஸ்டர் பீஸ்ட் பெற்றுள்ளார்.