மரியம் நவாஸ்
மரியம் நவாஸ் 
உலகம்

முதல்வர் பதவியில் நவாஸ் ஷெரீப் மகள்!

Staff Writer

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டாா். இவர் முதல் பெண் முதல்வராவார். 12 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த மாகாணத்தில் பெண் ஒருவா் முதல்வராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.

பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில், நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. இதனால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்(என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றன.

பஞ்சாப் மாகாண சட்ட பேரவைக்கு நடந்த தேர்தலில், பி.எம்.எல். (என்)கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 113 இடங்களில் வெற்றி பெற்றனர். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பி.எம்.எல்(என்) கட்சியின் முதல்வராக மரியம் நவாஸ்(50) தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று பொறுப்பேற்றார்.

பாகிஸ்தான் வரலாற்றில் பெண் ஒருவர் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பதவியேற்ற பிறகு அவர் பேசுகையில்,‘‘ என்னுடைய தந்தை அமர்ந்திருந்த ஆசனத்தில் இப்போது அமர்ந்துள்ளேன். இந்த பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த பெருமை. பெண் தலைமைத்துவம் தொடரும்” என்றார்.