உலகம்

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்… உள்துறை அமைச்சர் ராஜினாமா!

Staff Writer

நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப், எக்ஸ் உள்பட 26 சமூக வலைத்தள செயலிகளுக்குக் கடந்த வியாழக்கிழமை (செப. 4) நேபாள அரசு தடை விதித்தது.

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி சமூக ஊடகங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகப் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கக் கோரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் நேற்று காலைமுதல் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் தேசியக் கொடி, அரசுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும் முழக்கமிட்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

காத்மாண்டின் புது பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி இளைஞர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது சிலர் நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரின் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றனர். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தடியடி நடத்தியதோடு, ரப்பர் குண்டுகளால் போலீஸாா் சுடத் தொடங்கினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூட்டில் 19 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, சமூக ஊடக செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.

திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடர்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிருதிவி சுப்பா குருங் வெளியிட்டார்.

மேலும், ‘சமூக வலைத்தள செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.