கொஞ்ச நாள் இந்த சீன உளவாளி பஞ்சாயத்து சத்தம் கம்மியாக இருந்தது. இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது சிக்கி இருப்பது அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஏ.ஐ. கம்பெனிகளில் ஒன்றான என்விடியாவின் தலைவர் ஜென்சன் குவாங்.
சிங்கப்பூரில் இயங்கிவரும் மெகஸ்பீட் என்ற தரவுகள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக இருப்பவர் ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண்மணி. சீனத்தில் தொலைக்காட்சி நிறுவனராக இருந்தவர் பிறகு ஐடி துறையில் கால் பதித்தவர் இந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இவரை சீன உளவு நிறுவனம் தங்களுக்காக என்விடியாவின் தலைவரான ஜென்சன் குவாங்கை உளவு பார்க்க நியமித்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டி உள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் என்விடியாவின் சிப்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவவை. இவை தொடர்பான என்விடிவியாவின் முடிவுகளை அறிவதுடன் இந்த சிப்களை சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக சீனத்துக்குக் கடத்துவதிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை என்விடியாவின் தலைவர் 63 வயதான ஜென்சன் குவாங், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தன் மனைவிக்கு நான் நேர்மையாக இல்லை என்று ஒப்புக்கொண்டார். தன் குடும்பத்தினருடன் மன்னிப்பும் கோரினார்.
ஆலிஸ் ஹுவாங்குடன் ரகசிய உறவில் இருந்த ஜென்சன் குவாங், இப்படி ஒப்புக்கொண்ட நிலையில் என்விடியா நிறுவனம் இது பற்றிய விசாரணையைத் தொடங்கி உள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக குவாங் அறிவித்தார்.
அடுத்தவாரம் டிரம்ப்- சீன அதிபர் ஷி இடையே பேச்சு வார்த்தை நடக்க இருக்கும் நிலையில் இந்த உளவுபார்த்த தகவல் வெளியாகியிருப்பது கவனத்துக்குரியது.
என்விடியாவின் பங்குவிலை இதனால் சரிவுக்குள்ளானது. ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா இரண்டும் போட்டி போட்டு வரும் நிலையில் என்விடியாவின் சிப்கள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தி வருகிறது.
1993-இல் இணை நிறுவனராக என்விடியா நிறுவனத்தை ஜென்சன் குவாங் தொடங்கினார். முப்பது ஆண்டுகளாக இதை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
மிகப்பெரிய கோடீஸ்வரரான இவர் இப்படி சீன பெண் உளவாளி வலையில் விழுந்ததுதான் ஐடி உலகில் பெரும் பேச்சாக இருக்கிறது.