ஹார்மூஸ் நீரிணை 
உலகம்

‘எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்மூஸ் நீரிணை திறப்பு’ - ஈரான்

Staff Writer

எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சுமார் 3 வாரங்களுக்கு மேல் இந்த போர் நீடித்து வருகிறது. இதற்கிடையில், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால், அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரான் எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் ஹார்மூஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக திறக்க வேண்டும். இல்லையெனில், ஈரானின் பல மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி முற்றிலும் அழித்துவிடும். மிகப்பெரிய மின் நிலையத்திலிருந்து தாக்குதல் தொடங்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தங்கள் எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச கடல்சார் அமைப்புக்கான(IMO) ஈரான் தூதர் அலி மவுசவி கூறுகையில், “ராஜதந்திர வழிகளுக்கு ஈரான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும், ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையும் அதைவிட முக்கியமானவை.

ஹார்மூஸ் நீரிணையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு, ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களே மூலக் காரணம் ஆகும். ஈரானின் எதிரிகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் ஹார்மூஸ் நீரிணை திறந்தே உள்ளது. ஈரானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாக பயணம் செய்வது சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்.