அமெரிக்கா-ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தையொட்டி, கட்டணமில்லா கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது," என்று ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டார்.
அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
"தீவிரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர்; மேலும், இதன் அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் உலகம் முழுதும் அமைதியை நிலைநாட்டுவதுடன், உலகின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.