பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள் மாயம் 
உலகம்

பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் மாயம்!

Staff Writer

பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில், நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற மலையேற்ற வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் பல முக்கிய மலைச்சிகரங்கள் உள்ளன. அங்குள்ள மலைச்சிகரங்களில் ஏற, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் செல்கின்றனர்.

வடபாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 26,401 அடி உயரத்தில் 'பிராட் பீக்' மலைச்சிகரம் உள்ளது.

உலகின் 12ஆவது மிக உயரமான மலைச்சிகரம் இதுவாகும். இந்தப் பகுதியில் பலத்த மழையும், பனிப்பொழிவும் அவ்வப்போது ஏற்படும்.

இந்நிலையில், நேற்று பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற மலையேற்ற வீரர்கள் 10 பேர், 'பிராட் பீக்' மலைச்சிகரத்தில் மலையேறத் தொடங்கினர். அப்போது, அங்கு நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய மலையேற்ற வீரர்கள், மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற மலையேற்ற வீரர்கள் 10 பேர் அடங்கிய குழு, பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 'ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான்' அமைப்பின் துணைத் தலைவர் கர்ரார் ஹைதரி தெரிவித்துள்ளார்.

உடனடியாக தேடுதல், மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், மூத்த நிர்வாகிகள், அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, வீரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram