உலகின் மிக அதிக வயதுடைய மூன்று சகோதரிகள் 
உலகம்

மூன்று சகோதரிகளின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன?

Staff Writer

பிரேசிலைச் சேர்ந்த 109, 104, 103 வயதுடைய மூன்று சகோதரிகள், (மொத்தம் 316 வயதுடன்) உலகின் மிக அதிக வயதுடைய உயிருடன் இருக்கும் சகோதரிகள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். இந்தச் சாதனை கின்னஸ் சாதனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவர்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கண்டறிய சாவோ பாவுலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டிஎன்ஏ லாங்கிவோ பிராஜெக்ட் மூலமாக விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நீண்ட ஆயுளுக்கு, சுற்றுச்சூழலைவிட அவர்களின் மரபணுக்களே முக்கிய காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த நீண்ட ஆயுளுக்கான காரணத்தை அந்த சகோதரிகளிடம் கேட்டபோது அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பயன்படுத்தாத உணவு வகைகள், குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும்தான் தங்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காத்தன என்று கூறினர்.

மேலும், இந்த நீண்ட ஆயுளுக்குப் பின்னால் மரபணுக்களின் பங்கு உள்ளதா என்பதை அறிய, அவர்களின் இரத்த மாதிரிகள், உடல்நலத் தகவல்களை விஞ்ஞானிகள் சேகரித்து ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர்.

இதய நலம், நினைவாற்றல், தசை வலிமை உட்பட்ட அம்சங்களைப் பாதுகாக்கும் உயிரியல் காரணிகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஆய்வு, எதிர்காலத்தில் முதுமையைத் தள்ளிப்போடும் புதிய சிகிச்சைகள், ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான வழிகளை உருவாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram