செயற்கை கோள் உதவியுடன் இரவில் சூரியஒளி 
உலகம்

இரவில் சூரிய ஒளியை விற்க இந்திய நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!

ம.தினோவிகா

இந்தியாவின் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இரவில் சூரிய ஒளியை விற்க அமெரிக்காவின் ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளுடன் இயங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனம் விக்ரம் - 1 என்ற ஏவுகணை மூலமாக விண்வெளியில் செயற்கைக்கோளை ஏவியது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிப்ளெக்ட் ஆர்பிட்டல் என்ற நிறுவனம், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு செயற்கைக் கோள்களை ஏவ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த செயற்கைக்கோள்களின் மூலமாக பிரதிபலிக்கும் கண்ணாடிகளை சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தி, பூமியில் தேவைப்படும் இடங்களில் துல்லியமாக சூரிய ஒளியை விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூரிய ஒளி முறையை 5 கி.மீ. பரப்பளவில் வழங்கவும், எப்போது வேண்டுமானாலும் சூரிய ஒளியை அணைக்கவும், சூரிய ஒளியின் பிரகாசத்தைத் தேவைக்கேற்பச் சரிசெய்து கொள்ளும் வகையிலும் செயல்படுத்தவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலமாக மீட்புப் பணிகளுக்காக பேரிடர் பகுதிகளிலும், சூரிய மின் பண்ணைகளில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது போன்ற திட்டங்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என்றும், மனிதர்கள், பிற உயிரினங்களின் உடலுக்குள் இயங்கும் இயற்கையான 24 மணிநேர உயிரியல் கடிகாரத்தைக் பாதிக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram