27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த சுனிதா வில்லியம்ஸ் ஒய்வு பெற்றுள்ளார்.
60 வயதாகும் சுனிதா தற்போது இந்தியா வந்துள்ளார். நேற்று அமெரிக்க மையம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபெற்றார். சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக் கொடண்து தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவரைப் பற்றிய சில குறிப்புகள்…
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனை என்ற ஆச்சரியத்தைத் தாண்டி, அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை குஜராத்தை சேர்ந்தவர் ஆவார்.
1965இல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் பிறந்தவர். இவரது தாய் ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஆவார்.
அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் கடற்படையில் நியமிக்கப்பட்டார்.
1989 - அமெரிக்க கடற்படையில் விமானியாக பணி உயர்வு பெற்றார். அமெரிக்க கடற்படை விமானியாக வளைகுடா போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். பின்னர், 1995 - புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 2017ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இருந்து கேப்டனாக பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அதுவரை அவர் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை கிட்டத்தட்ட 3,000 மணிநேரம் இயக்கி இருக்கிறார்.
1998 - அந்த ஆண்டில் தான் நாசாவால் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2006, 2012, 2024 - 2025 என இதுவரை மூன்று முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார் இவர்.
இவரது கடைசி விண்வெளி பயணத்தை யாராலும் மறக்க முடியாது. அவர் சென்ற விண்கலத்திற்கு ஏற்பட்ட கோளாறினால், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளிக்கு சென்ற இவர், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி தான் பூமிக்கு திரும்பினார்.
விண்வெளியில் மராதான் ஓடிய முதல் பெண்மணி. விண்வெளி நடைப்பயணத்தில் சாதனை செய்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார்.