வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோரே இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசைப் பெறுகின்றனர்.
விருதின் ஒரு பாதி டேவிட் பேக்கருக்கும் மறுபாதி மற்ற இருவருக்கும் வழங்கப்படுகிறது. இதில், பேக்கர் கணினி புரத வடிவமைப்புக்காகவும் மற்ற இருவரும் புரதக் கட்டமைப்புக் கணிப்புக்காகவும் விருதைப் பெறுகின்றனர்.
நன்கு அறியப்பட்ட அனைத்து புரதங்களின் கட்டமைப்பையும் கணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் டெமிசும் ஜம்பரும் வெற்றிகண்டுள்ளனர். டேவிட் பேக்கரோ பழைய புரதங்களின் உருவாக்கத்திலிருந்து முற்றிலும் புதிய உயிர்காக்கும் புரதங்களை உருவாக்குவதில் தனியிடம் பெற்றுள்ளார்.