பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறுகின்றனர் 
உலகம்

2 அமெரிக்கர்களுக்கு பொருளாதார நோபல் பரிசு!

ம.தினோவிகா

நடப்பு ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஈ.ஹால், கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகிய இரு பேராசிரியர்களும் 2026 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறுகின்றனர்.

இவர்கள் மேக்ரோ எக்னாமிக்ஸ் ஸ்டெபிளைசேசன் எனப்படும் பேரியல் பொருளாதார நிலைப்படுத்துதலுக்கான நுண்பொருளியல் (மைக்ரோ எக்னாமிக்ஸ்) அடித்தளங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய பொருளாதாரக் கட்டமைப்புகள், அரசாங்கமும், வங்கிகளும் நவீனப் பொருளாதாரங்கள் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை தங்களது நிதிக்கொள்கை, நாணயக் கொள்கைகள் மூலமாக துல்லியமாகச் சீரமைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார நிலை என்பது அதீத ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் ஒன்றாகும். இதனைக் கையாள்வதற்கும், இதனால் ஏற்படும் பாதிப்புகளான அதிகப்படியான வேலையின்மை, கட்டுப்பாடற்ற பணவீக்கம் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு நிலைப்படுத்துதல் கொள்கை அவசியமாகிறது.

கடந்த காலப் பொருளாதார மாதிரிகள், பணவீக்கம், உற்பத்தி, நுகர்வு ஆகிய பேரியல் பொருளாதார நிலைப்படுத்துதலுக்கு வரலாற்று, புள்ளிவிவர இணைப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

இது தோல்வியடைந்த நிலையில், பொருளாதார நிலைப்படுத்துதலுக்கு புதிய கொள்கைகள் தேவைப்பட்டன. இதற்கு ராபர்ட் ஈ.ஹால், மைக்கேல் வுட்ஃபோர்ட் ஆகிய இருவரும் புத்துயிர் ஊட்டியிருக்கின்றனர்.

பழைய மாதிரிகளைப் போல் இல்லாமல், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை இயக்கும் கோடிக்கணக்கான தனிப்பட்ட குடும்பங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் தினசரி நடவடிக்கைகள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்று ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் நுண்பொருளியலை அடித்தளமாக வைத்து ஒரு மாதிரியை கட்டமைத்துள்ளனர்.

ராபர்ட் ஈ.ஹால், நீண்டகாலமாக கண்டுபிடிக்க முயலும், ஒரு குடும்பம் தங்களது எதிர்கால வருமானம் குறித்த எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் நுகர்வைத் தீர்மானித்தால், நுகர்வில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது என்ற உண்மையை கணித ரீதியாக விளக்கினார்.

மைக்கேல் வுட்ஃபோர்ட், ராபர்ட் ஈ.ஹாலின் நுண்பொருளியல் அடித்தளத்தைப் பயன்படுத்தி, முழுமையான பேரியல் பொருளாதாரக் கொள்கை, நாணயக் கொள்கைக்கான விரிவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் வட்டி விகிதங்களை மாற்றுவது மட்டுமே வங்கிகளின் வேலை இல்லை என்றும், அவர்கள் எதிர்காலத் தொடர்பு மிக அவசியம் என்று கண்டறிந்தார்.

நிறுவனங்கள் தங்களது பொருட்களுக்கான விலையை, எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டி விகிதம் எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்ந்தே நிர்ணயிக்கின்றன என்பதை தெளிவுபடுத்தியதுடன், நவீன நாணயக் கொள்கைக்கான வட்டி, விலைகள் என்ற கோட்பாட்டை வழங்கினார்.

இவர்களின் புதிய மாதிரிகள், ஆற்றல் நெருக்கடிகள் போன்ற தற்போதைய திடீர் அதிர்ச்சிகளைச் சமாளிக்க உதவி புரியும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram