இஸ்ரேல் மீது ஈரான் படை தாக்குதல் 
உலகம்

அமெரிக்கா - ஈரான் இரு வார போர் நிறுத்த அறிவிப்பு! கடைசி நேரத்தில் பாகிஸ்தானுடன் களமிறங்கிய சீனா!

Staff Writer

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையிலான போரில் இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஈரானையே அழித்துவிடுவேன் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தல் காலக்கெடு முடிவுக்கு வருவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக இந்த ஒப்பந்தம் உருவானது உலகை நிம்மதியில் ஆழ்த்தி உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்து உதவி வந்தது. இதைத் தொடர்ந்து இந்த சண்டை நிறுத்தத்தை இரு நாடுகளும் அறிவித்தன. ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘ இரு வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாகவும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது அனுமதிக்கப்படும்’ என்றும் கூறினார். பாகிஸ்தானின் பிரதமர், ராணுவ தளபதி ஆகியோரின் போர் நிறுத்த முயற்சிகளுக்கு அவர் நன்றி கூறினார்.

'ஈரான் சமாதானத்துக்கு அளித்த பத்து அம்ச திட்டம் ஏற்கப்படுகிறது. உடனடியாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் . எங்கள் ராணுவத் தாக்குதலின் நோக்கம் நிறைவேறிவிட்டதால் தாக்குதலை நிறுத்திக்கொள்கிறோம்’ என ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நிறுத்தப்படுவதாக கூறிய அமெரிக்க அதிகாரி ஒருவர், இஸ்ரேலும் இருவாரங்களுக்குத் தாக்குதலை நிறுத்தும் எனக் கூறினார்.

இந்த சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயன்று வந்தாலும் ஈரானின் நட்பு நாடான சீனா கடைசி நேரத்தில் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சண்டை நிறுத்தம் லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார்.