குழந்தைகள் சமூகஊடகங்களைப் பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை. 
உலகம்

14 வயதுவரை சமூக ஊடகத்துக்குத் தடை- அமீரகம் அதிரடி!

Staff Writer

அரபு நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம், 15 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

அந்த நாட்டில் இயங்கிவரும் அனைத்து சமூக ஊடகங்களின் பயன்பாட்டிற்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 வயதுள்ள குழந்தைகள் பயன்படுத்த பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டினால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள நாடுகள் முயன்றுவரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

15 வயதுக்குக் குறைவான வயது குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்குவது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அவர்களால் தகவல், கருத்து பதியவோ பகிரவோ, பொதுக் குழுக்களில் சேரவோ முடியாது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயன்படுத்துவோரின் வயதை உறுதிசெய்ய சுயமாக வயதைக் கூறும் முறையைத் தடைசெய்து, டிஜிட்டல் சரிபார்ப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் சரியான வயதை சமூக ஊடக நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பற்ற இணையவழித் தொடர்புகளுக்கு ஆளாவது, சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு, தனிப்பட்ட தரவுகள் சேகரிப்பு ஆகியவற்றைத் தடுக்கவும்; குழந்தைகளின் மனம், உடல் நலத்தைப் பேணிக்காக்கவும் இந்தப் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாதம் அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.