நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச் -1பி விசாக்களுக்கு விதித்த 1,00,000 டாலர் கட்டணம் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்தக் கட்டணம் ஒரு வரி என்றும், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் அமெரிக்க கூட்டரசு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல் இதை நடைமுறைப்படுத்தியது சட்டவிரோதமானது என்று மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் கூறியுள்ளார்.
ஹெச் -1பி விசா என்பது அமெரிக்க பணி விசா ஆகும். இது, உலகில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த வழிவகுக்கும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய ஹெச் -1 பி விசா பயனாளிகளுக்கு 1,00,000 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். அமெரிக்கப் பணியாளர்களை அந்நாட்டு நிறுவனங்களில் அதிகம் பணியமர்த்த வேண்டும் என்பதே காரணம் எனக் கூறப்பட்டது.
இந்திய தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் இலட்சக்கணக்கானோர் இந்த விசாவைப் பயன்படுத்துகின்றனர். தற்போதைய நிதியாண்டில், அமெரிக்காவில் பணிபுரிவதற்காக ஹெச் -1பி விசாக்களை நாடிய 2,00,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், கட்டணமாக 1,00,000 டாலர் செலுத்தியதாக அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் செனட் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் ஒரு சட்டவிரோதமான செயல் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டிரம்ப் அரசு தன்னுடைய அதிகார வரம்பை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டரசு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை அதிகமானவர்கள் வரவேற்றுள்ளனர்.