டூர் டி பிரான்ஸ் 
உலகம்

அம்மாடியோவ்... 3,333 கி.மீ. உலகின் மிகப்பெரிய சைக்கிள் திருவிழா!

Staff Writer

உலகின் மிகப்பெரிய சைக்கிள் பந்தயமான டூர் டி பிரான்ஸ் இன்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் கோலாகலமாக தொடங்குகிறது.

21 கட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டி ஜூலை 4 முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. மொத்தம் 184 வீரர்கள், 23 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் வெற்றி பெற 3,333 கிலோமீட்டர் தூரத்தை வீரர்கள் கடக்க வேண்டும்.

நடப்பு ஆண்டுக்கானப் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தொடங்கிறது. இந்த பந்தயத்தில் முதல் நாள் போட்டியாக 19.6 கி.மீ தூரத்திற்கான 'அணி நேர சோதனை' இன்று நடைபெறுகிறது.

டூர் டி பிரான்ஸின் நான்கு புகழ்பெற்ற ஜெர்சிகள், பந்தயத்தின் நான்கு பிரிவுகளிலும் முன்னிலை வகிப்பவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், அனைத்துக் கட்டங்களையும் முடிக்க மிகக் குறைந்த நேரத்தை எடுத்துக்கொண்ட வீரருக்கு மஞ்சள் ஜெர்சி வழங்கப்படுகிறது.

புள்ளி வகைப்பாட்டில் முன்னணியில் இருப்பவருக்கு பச்சை ஜெர்சி வழங்கப்படுகிறது. இது பந்தயத்தில் உள்ள ஸ்பிரிண்ட் வீரர்களுக்கான ஜெர்சியாகக் கருதப்படுகிறது.

சிறந்த மலை ஏறுபவருக்கும், மலைகள் பிரிவில் வெற்றி பெறுபவருக்கும் போல்கா டாட் ஜெர்சி வழங்கப்படும்.

வெள்ளை நிற ஜெர்சி போட்டியில் பங்கேற்கும் சிறந்த இளம் வீரருக்கு வழங்கப்படுகிறது.

நடப்பு சாம்பியனும் நான்கு முறை டூர் டி பிரான்ஸ் பட்டம் வென்றவருமான டாடெஜ், முன்னாள் சாம்பியன் ஜோனாஸ், உலகச் சாம்பியன் ரெம்கோ ஆகியோருக்கு இடையேயான மோதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

முதல் நாளிலேயே மஞ்சள் ஜெர்சியை யார் கைப்பற்றுவார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram