லெபனான், யாரோன் பகுதி சுவர் கட்டிய இஸ்ரேல் 
உலகம்

அடாவடி இஸ்ரேல்- லெபனான் எல்லைக்குள் சுவர் கட்டுகிறது!

Staff Writer

பாலஸ்தீனத்தின் மீது மனிதகுல விரோதமான போர்த் தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட காசா பகுதியை சுடுகாடாக ஆக்கிவிட்டது, இஸ்ரேல். ஐ.நா. அமைப்புகளையும் மீறி அதுசெய்த அட்டூழியம், ஓரளவுக்கு மேல் போகவே அமெரிக்கா தலையிட்டு சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவந்தது. 

இந்த விவகாரத்தில், காசா நகரைக் கட்டுப்படுத்திவந்த ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் ஆதரவு தரத் தொடங்கினர். அவர்கள் இஸ்ரேலின் இராணுவ நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் தொடுத்துவருகின்றனர். 

கனன்றுகொண்டிருந்த இந்த நெருப்பில், ஒரு கட்டத்தில், லெபனான் மீது தாக்குதலை நடத்தப்படும் என அறிவித்தே நடத்தியது, இஸ்ரேல் இராணுவம். 

பதிலுக்கு ஹிஸ்புல்லா குழுவினரும் மீண்டும் அவர்களைத் தாக்கினர். 

இந்த நிலையில் இவர்களுக்கு இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் வந்தது. 

அது அப்படியே தொடரும் சூழலில், தன்  வடக்கு எல்லைப் பகுதியை இஸ்ரேல் வலுப்படுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக லெபனானின் யாரோன் பகுதியிலும் இஸ்ரேல் சுவரைக் கட்டியது. 

இதனால் கடும் சீற்றமடைந்த லெபனான், இது சட்டவிரோதமான சுவர் என்று கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. எல்லை காப்புப் படையும் இந்தச் சுவரை இடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளது.