எழுத்தாளர் ஜனநேசன் 
செய்திகள்

எழுத்தாளர் ஜனநேசன் தெலுங்கானாவில் காலமானார்!

Staff Writer

எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான ஜனநேசன் தெலுங்கானா சென்றிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று அங்கு காலமானார். அவருடைய உடல் காரைக்குடிக்கு எடுத்துவரப்படுகிறது. 

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியிலும் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜனநேசனின் இயற்பெயர், இரா.விஜயராகவன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இவர் செயல்பட்டுவந்தார்.

ஆலிவ் இலைகளேந்தி ( கவிதை), சூரியனைக் கிள்ளி ( ஹைக்கூ),

கண்களை விற்று, புத்திக் கொள்முதல், வாஞ்சை, வரிசை, ஆளுமை, சொல்லப்படாத கதைகள், காரணம் அறிகிலார் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள்,

கே. முத்தையா வாழ்வும் பணியும், கந்தர்வன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்), கி. ரா.வின் காயிதங்கள், கந்தர்வன் படைப்புலகம் ( கட்டுரைகள்) தொகுப்பு ஆகியவை உட்பட 3 கவிதைத் தொகுப்புகள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 நாவல்கள், 4 கட்டுரைத் தொகுப்புகள் என 15 நூல்களை எழுதியுள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக உள்ள தன் மகனைப் பார்க்கச்சென்றபோது, இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் அங்கிருந்து காரைக்குடிக்கு எடுத்துவரப்பட்டு, நாளை பிற்பகலில் இறுதி நிகழ்வு  நடைபெறும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.