மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 
செய்திகள்

செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் பரிசீலனை!

Staff Writer

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தவிர்த்து வந்தார். செங்கோட்டையன்.

இந்தச் சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என்று பேசப்பட்டது. இதை எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னையில் இருந்து டெல்லி சென்றால் தகவல் உடனடியாக பரவிவிடும் என நினைத்து அவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்துவிட்டு, அதேபோல யாருக்கும் தெரியாமல் தமிழகம் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று காலையில்தான் தெரிய வந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.