"எப்போது பார்த்தாலும் சீனியர் என்கிறீர்களே? நீங்கள் (ஓபிஎஸ்) 2001இல் தான் எம்எல்ஏ. நான் 1989-லேயே எம்எல்ஏ.” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுகவில் மீண்டும் இணையவேண்டும் என ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இறங்கிவரவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ்சின் சொந்தப் பகுதியிலே சென்று கூட்டத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "நானா துரோகம் செய்தேன். எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தோம், எங்களைவிட்டு போகாதீர்கள் என்று. நீங்களே போனீங்க. அதற்கு நாங்கள் எப்படி காரணம் ஆவோம்? எங்கள் மீது பழி சுமத்தி பயனில்லை.
எப்போது பார்த்தாலும் அம்மா விசுவாசம் என்கிறீகளே. ஜெயலலிதாவிற்கு விசுவாசம் விசுவாசம் என்று கூறிக்கொண்டு, 89இல் ஜெயலலிதா போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு தேர்தல் வேலை செய்தீர்கள். இவரா ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தவர்?அதே சேவல் சின்னத்தில் 89இல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான்.
எப்போது பார்த்தாலும் சீனியர் என்கிறீர்களே? நீங்கள் 2001இல் தான் எம்எல்ஏ. நான் 89 லேயே எம்எல்ஏ. 1991 சேலம் மாவட்டச் செயலாளர். 1998நாடாளுமன்றத் தேர்தலில் கேட்காமலேயே சீட் கொடுத்தார் ஜெயலலிதா. வாரியத் தலைவர் என பல பதவிகளை வகித்தவன்.
பன்னீர்செல்வதுக்கு பதவி இல்லையென்றால் கட்சியைப் பார்க்க மாட்டார். அவரை மட்டும்தான் பார்த்துக் கொள்வார். 2001இல் எனது தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனக்கு வேறு தொகுதி கொடுத்தார்கள். ஆனால் நான் போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு வேலை செய்து வெற்றி பெற வைத்தேன். தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வதுதான் தொண்டனின் கடமை. அதனால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். துரோகம் செய்தவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
இது மூழ்குகிற கப்பல் இல்லை. கரை சேருகிற கப்பல். இந்தக் கப்பலில் ஏறுகிறவர் பிழைத்துக் கொள்ளலாம். ஏறாதவர் நடுக்கடலில் சென்று விடுவார். 2026இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இதே மேடைக்கு மீண்டும் நான் வருவேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது" என்றார்.