“சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தேர்தலில் தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர். கூட்டணி வைத்து இந்த இடத்துக்கு வரவில்லை.1 கோடியை 26 கோடியாக மாற்ற ரொம்ப நாள் ஆகாது.
தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடுகிறவர்கள் நாங்கள். அதனால்தான் சுதந்திரமாக நிற்கிறோம். இன்னும் நான்கைந்து மாதம் பொருத்து என் ஆட்டத்தை பாருங்கள். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை பார்ப்பீர்கள் இந்த தேர்தலில். உலகத்தின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றுவேன்.”என்றார்.