செய்திகள்

அகத்தியர்- செம்மொழி நிறுவனத்தின் செயலுக்கு கடும் எதிர்ப்பு!

Staff Writer

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் உண்மைக்குப் புறம்பான அகத்தியர் குறித்த ஆராய்ச்சிகளை நிறுத்திட அதன் தலைவர் முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டுப் பள்ளி கல்லூரிகளில் அகத்தியர் சம்பந்தமான போட்டிகள் நடைபெற அனுமதிக்க கூடாது என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கே.கங்கா, பொதுச்செயலாளர் த.அறம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

”சென்னையில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சார்பில் 'அருந்தமிழ் கண்ட அகத்தியர்' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கும், 'அகத்தியர் காட்டும் அறிவியல்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்து மதப் புராணங்களில் சிவபெருமானின் திருமணத்தைக் காண அனைவரும் வடக்கே கைலாய மலைக்குச் சென்றதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்துவிடவே, அதனைச் சமன் செய்வதற்காக சப்தரிஷிகளில் ஒருவரான அகத்தியரை சிவபெருமான் அனுப்பி வைத்தார் என்பது புராணக்கதை‌‌. சிவபெருமானிடமிருந்து தமிழைக் கற்று, தமிழுக்கு இலக்கணமும் எழுதி உலகுக்கே அவர்தான் தமிழ் மொழியைக் கற்பித்தார் என்றும், அகத்தியரின் கையிலிருந்த கெண்டிச்சொம்பைக் காக்கைத் தள்ளிவிட, அந்தக் கெண்டி சொம்புத் தண்ணீர் தான் காவிரியாக ஊற்றெடுத்தது என்றும் கட்டுக்கதையான அந்தப் புராணக்கதை நீண்டு போகிறது. இக்கதைக்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை.

மொழி என்பது உழைக்கும் மனிதர்கள் தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகத் தமக்குள் உருவாக்கியதே என்பதுதான் அறிவியல் உண்மை. காவிரி நீர் பெருக்கெடுப்புக்கு குடகு மலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் பருவ மழை தான் காரணம் என்பது வெள்ளிடை மலை‌. இவ்வுண்மைகள் தெரியாத காலத்தில் ஒரு கற்பிதத்தை உருவாக்க உருவானதுதான் அகத்தியர் என்ற போலித் தொன்மம்.” என்றும், 

”தமிழறிஞர்கள் அகத்தியர் என்ற கற்பனைக் கதையை ஆதாரபூர்வமாக நிராகரித்தது வரலாறு . மகாகவி பாரதியார் கூட, "வடமலை தாழ்ந்ததனாலே -தெற்கே வந்து சமன் செய்யும் குட்டை முனியும் கற்பனை என்பது கண்டோம்" என்று பாடியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாணவ மாணவியருக்கான போட்டிகள் மட்டுமல்லாமல், அகத்தியர் குறித்த ஆராய்ச்சிகளுக்கு மத்திய அரசு நிறுவனங்கள் நிதி உதவி செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழின் தொன்மையான வரலாற்றைப் புராணங்களின் அடிப்படையில் திருத்தி எழுதுவதற்கான எத்தனிப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரக்கப் பேசும் அறிவியல் மனப்பான்மைக்கு நேர் எதிரானது. இவ்வாறு அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.