பிரேமலாதா விஜயகாந்த் 
செய்திகள்

அ.தி.மு.க. சீட் தராததைப் பற்றி பிரேமலதா சொன்னது என்ன?

Staff Writer

மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலங்களவை சீட் குறித்து எழுத்துபூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.  

மாநிலங்களவை இடம் த.மா.கா., பா.ம.க.வுக்கு அடுத்து தே.மு.தி.க.வுக்குதான் தரப்பட்டிருக்க வேண்டும்; அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்போதைய அமைச்சர்களும் இருந்தபோது எந்த ஆண்டு என எழுத்தில் குறிப்பிடுமாறு கேட்டதற்கு, அது தேவையில்லை என்றும் இந்தத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குதான் வாய்ப்பு என்றும் பழனிசாமி கூறியதாகவும் பிரேமலதா விவரித்தார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி, தே.மு.தி.க. தங்கள் கூட்டணியில் தொடர்வதாகக் கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “ இங்கு எல்லாமே தேர்தலையொட்டிதான் நடக்கிறது. நாங்களும் அதன்படியேதான் முடிவுகளை எடுப்போம். வரும் ஜனவரியில் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் எங்கள் கட்சி மாநாட்டில்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை அறிவிப்போம்.” என்றார் பிரேமலதா.

மேலும், தி.மு.க.வின் மதுரைப் பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய அவர், விஜயகாந்த் மறைவின்போது முதலமைச்சர் ஸ்டாலின் இறுதிவரை இருந்து சென்றதையும் குறிப்பிட்டார்.