பெ. சண்முகம் 
செய்திகள்

அப்பாவு சொன்னதை ஏற்கமுடியாது- தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர் கருத்து!

Staff Writer

நெல்லை மாவட்டத்தில் சாதியப் பிரச்னையே இல்லையென சபாநாயகர் அப்பாவு கூறியது ஏற்புடையது இல்லை என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.  

அடிமனைப் பட்டா கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் சென்னையில் போராட்டத்தில் கலந்துகொண்ட அவரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது, பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்டனர். அதற்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார்.

“ திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆணவக் கொலைகளும் சாதிய வன்கொடுமைகளும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மோதல்களும் அதிகமாக நடக்கின்றன. நெல்லையில் சாதிய மோதல்கள் நடப்பதில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போலப் பேசியிருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே நாங்குனேரி மாணவன் சின்னத்துரை உயிருக்கு ஆபத்தான கட்டத்துக்குப் போய் திரும்பிவந்து படித்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது கொடூரமான தாக்குதல் நடந்திருக்கிறது. நேற்றுக்குமுன்தினம் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வேண்டும். நிரந்தரமாக இதற்கு முடிவுகட்ட வேண்டும்.” என்று பெ.சண்முகம் கூறினார்.

இந்த ஆட்சி அமைந்ததிலிருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்துவருகிறதே; தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் எனக் கருதுகிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு, ”சாதிய மோதல்களை சட்டம் ஒழுங்கு எனப் பார்ப்பதே முதலில் தவறு. சாதிவெறியர்கள், சாதி ஆணவம் கொண்டவர்கள் இந்தமாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இத்தகைய சாதிய மோதல்களைத் தூண்டிவிடக்கூடிய, ஈடுபடக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று மட்டும் பார்த்து தீர்வுகாண முடியாது.” என்று சண்முகம் பதில் அளித்தார்.