செய்திகள்

இந்திரா நூயியுடன் அமைச்சர் பிடிஆர் சந்திப்பு!

Staff Writer

பெப்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியை தகவல்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்துப் பேசினார். 

சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக ஏற்பாட்டில் இச்சந்திப்பு நடைபெற்றது. 

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநில ஆளுநர் நெட் லேமண்ட் தலைமையிலான தூதுக் குழுவினருடன் இந்திரா நூயியும் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றனர்.

சந்திப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தன் சமூக ஊடகப் பக்கங்களில் மகிழ்ச்சியுடன் படங்களையும் வெளியிட்டுள்ளார்.

கனெக்டிகட் அரசாங்கம், துணிகர முதலீடு, தொழிற்சாலைகள், கனெக்டிகட், யேல் பல்கலைக்கழகங்கள் போன்றவை தொடர்பாக சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

கல்வி, திறன் மேம்பாடு, அறிவுச் சொத்துரிமை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, மற்ற வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்கள் வேலைவாய்ப்புகள் குறித்து தாங்கள் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கும் கனெக்டிகட் மாநிலத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாகப் பேசியதாகவும் அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத் துணைத்தூதர் கிறிஸ் ஹோட்ஜெஸ், சுந்தரம் கிளேட்டன் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு ஆகியோரும் இதில் கலந்துகொணடனர்.