செய்திகள்

இரயில் ஓட்டுநர் தேர்வு திடீர் நிறுத்தம்- தெலங்கானாவில் தமிழர்கள் அவதி!

Staff Writer

இரயில் ஓட்டுநர் வேலைக்காக பிற மாநிலங்களுக்குத் தேர்வு மையம்வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவுசெய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

”இரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டோம். ஆனால் உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வுசெய்ய முடியவில்லை என பதில் அளித்தது.

இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வுகள் தேர்வெழுதச் சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்பக் காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்றும்,

”இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக்கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம்வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவுசெய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக இரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.

எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று வெங்கடேசன் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.