செய்திகள்

இராமேசுவரத்தில் சோகம்- 12 வயது சிறுமி, ஓட்டுநர் பலி!

Staff Writer

இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் 12 வயது சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மாவட்டத்தில் இராமேசுவரத்தை அடைவதற்கு ஒரே ஒரு சாலைதான் உள்ளது. இதன் அகலம் குறைவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதுமிருந்து அங்கு செல்லும் சுற்றுலா வண்டிகள் முண்டியடித்துக்கொண்டு அதிவேகத்தில் பறக்கின்றன. 

இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. வாரத்துக்கு ஒரு விபத்தாவது நிகழாமல் இந்த சாலையில் போக்குவரத்து இருப்பதில்லை என உள்ளூர்வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உச்சிப்புளி அருகே இன்று காரும் சுற்றுலா குழுவினரின் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டிவந்த வெங்கடேசுவரன் என்பவரும், வேனில் வந்த மகாலட்சுமி எனும் சிறுமியும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

காயமடைந்த 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.