செய்திகள்

இராமேசுவரம் ரிசார்ட்டில் 60 அறைகளுக்கு அமலாக்கத் துறை சீல்!

Staff Writer

இராமேசுவரம், பாம்பனில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் அமலாக்கத் துறையினர் தேடுதல் சோதனை நடத்திவருகின்றனர். அங்குள்ள 60 அறைகளுக்கு அவர்கள் சீல் வைத்து மூடிவிட்டனர். 

கொல்கத்தாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவே இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. 

இந்த விடுதியானது டிஎம் டிரேடர்ஸ், கேகே டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமானது என்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்த நிறுவனங்களின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சைலேஷ்குமார் பாண்டே, பிரசிஞ்சித் தாஸ், விராஜ் சுவாஸ் பாட்டீல் ஆகியோரைக் கைதுசெய்ததுடன், அவர்கள் வசமிருந்த 270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் கைப்பற்றியுள்ளது, அமலாக்கத் துறை. 

அதன் ஒரு பகுதியாக 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பன் சொகுசு விடுதியும் அமலாக்கத் துறையால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.