ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டம், ஜெனீவா 
செய்திகள்

இலங்கைக்கு வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்!

Staff Writer

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி ஜெனீவாவில் தொடங்குகிறது. ஜூலை 9ஆம் தேதிவரை இக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இலங்கை இனப்படுகொலைக்குப் பின்னரான நிலைமை தொடர்பாக, வழக்கமாக மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஆனால் இந்த முறை அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் மனித உரிமை ஆணையாளர் வால்கர் டர்க் இலங்கையின் போர் பாதித்த வடக்கு மாகாணத்துக்கு நேரில் சென்று நிலவரத்தை ஆய்வுசெய்யவுள்ளார்.

இம்மாதம் 23ஆம் தேதி டர்க் இலங்கைக்குப் பயணம் செய்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள்கள் இலங்கையில் இருக்கும் அவர், அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளியவாய்க்கால் பகுதியை உள்ளடக்கிய முல்லைத்தீவுக்கும் அவர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நவநீதம்பிள்ளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்தபோது, அவரின் முள்ளிவாய்க்கால் பயணத்துக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுதாரி மகிந்த இராஜபக்சே அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.