அன்புமணி  
செய்திகள்

இலங்கைப் படையினர் மீது வழக்கு பதியவேண்டும் - அன்புமணி

Staff Writer

”தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது சிங்களப் படை துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது என்றும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும்” என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள்  13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை நடத்தியுள்ள கொடூரத் தாக்குதலும்  கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் நடைபெற்ற இந்திய, இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டத்திலும்,  அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் அநுரா திசநாயகே சந்தித்துப் பேசிய போதும் எல்லைதாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கருணையுடன் நடத்த வேண்டும்; அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி,

“ஆனால், அந்த முடிவுக்கு முற்றிலும்  மாறாக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதை மன்னிக்க முடியாது” என்று கோபத்துடன் கூறியுள்ளார். 

”தமிழக மீனவர்கள் மீதான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு சட்டத்தின்படியோ, தர்மத்தின்படியோ மேற்கொள்வதில்லை. மாறாக, இனப்பகையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கிறது. அதனால் தான் கடந்த சில மாதங்களில் மட்டும்  சுமார் 50 மீனவர்களுக்கு சிறைத் தண்டனையையும், கோடிக்கணக்கில் அபராதத்தையும் இலங்கை  அரசு விதித்திருக்கிறது.  இலங்கை அரசுக்கு வேண்டுகோள்கள் விடுப்பதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. இலங்கைக்கு அதன் மொழியில் பதில் கூறினால் தான் புரியும்.” என்றும் அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்குக் காரணமான சிங்களப் படையினர் மீது  வழக்குப் பதிவு செய்து  அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.