இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, நேற்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக கோதுமை விலை குறைக்கப்பட்டது.
கோதுமையின் விலை ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டதால், நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசிய உணவான பாணின் விலையும் 10 ரூபாய் குறையும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஒரு கிலோ கோதுமை 175 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், அதில் 25 ரூபாயாவது குறைக்க வேண்டும்; அப்படிச் செய்தால்தான் பொருட்களின் விலையைக் குறைக்கமுடியும் என்று வெதுப்பகக் கடைகளின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்துக்குத் துணைசேர்க்கும் வகையாக, பத்து ரூபாய் விலை குறைக்கப்பட்டதாக பிரிமா, செரண்டிப் ஆகிய மாவு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்த்தனா, இந்த விலைக்குறைப்பு போதுமானது அல்ல என்றும் பாண் உட்பட வெதுப்பகப் பண்டங்களின் விலையைக் குறைக்க கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு 25 ரூபாயாவது குறைக்கவேண்டும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.