ஆளுநா் ஆா். என். இரவி  
செய்திகள்

உளறலை நிறுத்திக் கொள்ளுங்கள் இரவி - மார்க்சிஸ்ட் கட்சி தாக்கு!

Staff Writer

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முதல் தீர்மானமாக, கீழ்வெண்மணி தொடர்பான ஆளுநர் ஆர்.என்.இரவியின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதில், ”ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் தனது பொறுப்புக்கு கொஞ்சமும் பொருத்தமற்று உளறியுள்ளார். அந்தப் பேச்சில் அறிவுத்திறனோ, நாணயமோ வெளிப்படவில்லை. மாறாக, அவரின் அறியாமையே வெளிப்பட்டிருக்கிறது.

கீழ்வெண்மணி போராட்டம் சாதிய ஒடுக்குமுறைக்கும், கொடூர சுரண்டலுக்கும் எதிரான விவசாயத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற போராட்டம். செங்கொடியை கையிலேந்தி தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 44 பேர் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களுமாக நிலவுடமையின் கொடூரத்தால், சாதிய வன்மத்தால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதைக்கூட ஆர்.என்.ரவி 48 பேர் என்கிறார். அவர்களுக்கு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

விவசாயிகளும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளுமாய் தங்களின் உழைப்பின் ஒரு பகுதியை அளித்து அந்த நினைவாலயத்தை எழுப்பியிருக்கிறார்கள். அது அரசு நிதியில் கட்டப்பட்டது என்பது போல ஆர்.என்.ரவி அவதூறாக பேசியுள்ளார்.

அதுவொரு ஜனநாயகப் போராட்டம். ஆனால், வரலாற்றுப் புரிதலும் அறிவு நேர்மையும் அற்ற முறையில் ஆர்.என்.ரவி அந்தப் போராட்டம் மாவோயிஸ்டுகளால் தூண்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். பிரமாண்டமான நினைவாலயம் அதனருகே குடிசைகள் என்று எள்ளி நகையாடியிருக்கிறார். கோயில் கோபுரங்களை கட்டுவதற்கு குடிசையிலிருப்போர் நிதி கொடுக்கக் கூடாது என்கிறாரா? உழைப்பாளி மக்கள் தங்கள் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த தோழர்களுக்கு நினைவிடம் எழுப்புவதை கேள்வி எழுப்புகிறாரா?

வரலாறு, போராட்டம், தியாகம், போராட்டங்களைக் கொண்டாடுவது என்பது எந்த வரலாற்றுக்கும் சம்மந்தம் இல்லாத ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடியாளாக செயல்படும் ஆர்.என்.ரவிக்கு இவற்றைப் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு மட்டும் அல்ல பேசுவதற்குக் கூட எவ்வித தகுதியும் கிடையாது.

வெண்மணி, சமூக நீதி, பொதுவுடமை இயக்கம் உள்ளிட்ட இந்தியாவில் எந்தவொரு போராட்டம் மற்றும் முற்போக்கு இயக்கங்களை பற்றி தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்ற முறையில் ஆர்.என்.ரவி உளறிக் கொட்டுவதையும், வன்மம் கக்குவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆர்.என்.ரவியின் இந்த உளறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், “சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் மீண்டும் கோரப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவு, அம்மா உணவகங்களில் பணிபுரிந்த ஊழியர்களை கொண்டு தனி கிச்சன் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. சென்னை மாமன்ற கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது காலை உணவு திட்டத்தை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.

எனவே மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இத்துடன், “கோவை மாநகரின் இருபகுதிகளில் போக்ஸ் எஜூமேட்டீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் கணிணி வழியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியினைச் செய்து வந்துள்ளது. இதில் சுமார் 3000 இளம் ஆண் - பெண் தொழிலாளர்கள் 5 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வேலை செய்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், கடந்த 25ந் தேதி அந்நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் மின்னஞ்சல் மூலமாக நிறுவனம் மூடப்பட்டதாக அறிவித்துவிட்டது. தமிழ்நாடு அரசினுடைய தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. வேலை செய்து வந்த பணியாளர்களும் அவர்களது குடும்பத்தாரும் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள்.

முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் இப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசும், தொழிலாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திட வேண்டும்.” என்றும் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.