செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்- அரசு வெளியிட்ட குறிப்பு!

Staff Writer

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 108ஆவது பிறந்த நாளான நாளை அமைச்சர்கள் காலை 9.30 மணியளவில்  சென்னை, அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் இது அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர், துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என்றும் தமிழ்நாட்டு அரசின் செய்திக்குறிப்பில் புதிய செய்தியைப் போல அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எம்ஜிஆர் யார் என்கிற அளவுக்கு, அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும் அரசுத் தரப்பில் வெளியிட்டுள்ளனர்.

”எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 17.1.1917 அன்று கோபாலன்  மேனன் – சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார்.  தமது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார்.  1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து  30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.

கருணாநிதி 1950ஆம் ஆண்டு திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த சிறந்த திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களை ‘இதயக்கனி‘  என்று அழைத்தார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953 ஆம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தாம் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள்  தொடர்ச்சியாக தமிழகத்தின் முதலமைச்சர்  பதவியை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரதரத்னா‘  விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், அன்னாரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், கருணாநிதி 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அன்னாரின் திருவுருவச் சிலையினையும் 31.7.1998 அன்று   திறந்துவைத்துப் பெருமை சேர்த்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் வருவதற்கு எவ்வளவு காலம் என்பது தெரியாதநிலையில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அதற்கான முன்னோட்டப் பணிகளில் இறங்கிவிட்டன. அதன் ஜூரம் அரசு அதிகாரிகளையும் தாக்கிவிட்டதோ என்கிறபடியாக சிறப்புச் செய்திக்குறிப்புகள் வலம்வரத் தொடங்கியுள்ளன என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.