செய்திகள்

எரிக்கப்பட்ட இராணிப்பேட்டை இளைஞர் உயிரிழப்பு!

Staff Writer


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை அவர் மறைந்து விட்டார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், தான் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். 

”தமிழரசன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவரான அவர், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் முன்னிலையில் இருந்தார். சமூகவிரோத சக்திகளை கண்டித்தது தான் அவரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. நெல்வாய் பகுதியில் திருமால்பூரைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் கஞ்சா வணிகம் செய்வதையும், சட்ட்விரோத செயல்களைச் செய்வதையும் பிழைப்பாகக் கொண்ட கும்பல், அவரை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டு வீசி, உயிருடன் எரித்து படுகொலை செய்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவனும் இவரும் மாறுபட்ட கருத்துகளைக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.