பெயர்ப் பலகையைத்திறந்து வைத்த உதயநிதி 
செய்திகள்

எஸ்.பி.பி. வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர்!

Staff Writer

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்குத் தமிழ்நாடு அரசு அவர் பெயர் சூட்டியிருப்பது கலை உலகத்தைக் களிப்பில் ஆழ்த்துகிறது என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார்.

வர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதில், "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்குத் தமிழ்நாடு அரசு அவர் பெயர் சூட்டியிருப்பது கலை உலகத்தைக் களிப்பில் ஆழ்த்துகிறது என்று பாடலாசிரியர் வைரமுத்து கூறியுள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மறைந்த பெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்குத் தமிழ்நாடு அரசு அவர் பெயர் சூட்டியிருப்பது கலை உலகத்தைக் களிப்பில் ஆழ்த்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலைமாண்பை அதுகாட்டுகிறது. கைதட்டிக்கொண்டே நன்றி சொல்கிறேன் என் இசைச் சகோதரா!

"காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்; வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்" என்று பாடிப் பறந்த பறவையே, உன் புகழ் எத்துணை உலகம் சென்றாலும் நீ வாழ்ந்த வீதியிலேயே வரலாறாய் அமைவது பெருமையினும் பெருமையாகும். இனி காலம்தோறும் அரசாங்க ஆவணங்களும், பொதுவெளியும் உன் பெயரை உச்சரிக்கும். மரணத்தை வெல்லும் கருவியல்லவோ கலை?" என்று தெரிவித்துள்ளார்.