பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக வெளி நாடுகளுக்கு எம்.பி.கள் குழுக்களை அனுப்புவது ஒன்றிய அரசின் பலவீனத்தை மறைக்கும் முயற்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா கூறியுள்ளார்.
இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில், ”பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக ஏழு நல்லெண்ண தூதுக் குழுக்களை இந்திய ஒன்றிய அரசு அமைத்திருப்பதை” வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”'ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் 'எல்லை தாண்டிய பயங்கரவாத'த்திற்கு எதிரான இந்தியாவின் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் தலைமையிலான ஏழு குழுவினர் இந்த மாத இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் உட்பட முக்கிய நாடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
" அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் ஒருமித்த கருத்தையும் உறுதியான அணுகுமுறைகளையும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தலைமையிலான குழுக்கள் முன்வைக்கும். குறிப்பாக, ‘பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்’ என்ற நாட்டின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்வார்கள் ” -என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
அந்த ஏழு குழுக்களில் இரண்டு குழுக்களை பாஜகவினரும், அடுத்த இரண்டு குழுக்களை அதன் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா (ஷிண்டே) ஆகிய கட்சிகளைச் சார்ந்தவர்களும் தலைமையேற்று வழிநடத்துவர். அத்துடன், பிற மூன்று குழுக்களை, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையேற்று வழிநடத்தவுள்ளனர். இவ்வாறு ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒருபுறம் எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்துவது, இன்னொரு புறம் அதே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை நல்லெண்ணத் தூதுவர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்கிற ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையானது முரண்பாடாகவுள்ளது. இதன்மூலம் ‘பாஜக'வின் நாடக அரசியல்' அம்பலப்பட்டுள்ளது.” என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு இவ்வாறு நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்கிற நிலைப்பாட்டினை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது என சந்தேகம் எழுப்பியுள்ள அவர்,
”முதலாவதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற இந்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். அதனால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. இது கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
இரண்டாவதாக, இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததும் அதற்கு அவர் கூறிய கூறிவரும் காரணங்களும் இந்திய ஆட்சியாளர்களை, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிம்பத்தைப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிட்டது எனலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”இதன் காரணமாக போர் குறித்துப் பேசுவதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் உட்பட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினோம். ஆனால் பாஜக அரசு அதற்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை.
எனவே, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை மாற்றுவதற்காகவும்; நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர்ப்பதற்காகவும்தான் இந்த தூது குழுக்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசானது எண்ணிக்கை அளவில் சிறுபான்மை அரசாக இருந்தாலும் தனது பெரும்பான்மைவாத அணுகுமுறையை அது மாற்றிக் கொள்ளவில்லை. நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் அதன் முயற்சியையும் அது கைவிடவில்லை.
கடந்த பத்தாண்டுகளை விட தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் வெறுப்புப் பிரச்சாரம் முன்னிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கண்டும் காணாமல் விடுவதன்மூலம் அதை ஊக்குவிக்கிறது.
பாஜக அரசின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் இஸ்லாமிய வெறுப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் காரணத்தால்தான் அது உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்.
உலக நாடுகளுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுப்புகிற தூதுக் குழுக்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம். அது வெற்றிபெற வேண்டுமெனில் முதலில் ஒன்றிய பாஜக அரசு தான் பின்பற்றி வருகிற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும்.” என்றும் திருமாவளவனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.