இரா. முத்தரசன் 
செய்திகள்

கம்யூ. நிர்வாகி சித்ரவதை - ஸ்டாலினின் போலீஸ் துறை மீது முத்தரசன் குற்றச்சாட்டு!

Staff Writer

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் செயலாளரைத் தாக்கி போலீஸ் விடியவிடிய சித்ரவதை செய்துள்ளது என்று பிரச்னை எழுந்துள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில், இதுகுறித்து விவரித்துள்ளார்.

“ இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.பாலன். இவர் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் பல ஆண்டுகளாக உணவகம் நடத்திவருகிறார். வழக்கம்போல உணவகத்தில் பேருந்துக்குச் செல்லும், வெளியூர்ப் பயணிகள் சிலர் 15.02.2025 ஆம் தேதி இரவு நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்த காவலர்கள், கடையில் இருந்த பாலனிடம், கடையை உடனே மூட உத்தரவிட்டனர்.

காவலர்கள் கூறியதைத் தொடர்ந்து பாலனும் கடையை மூடும் வேலையில் ஈடுபட்டார். இந்த நிலையில் அங்கு வந்த துணைக் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநர் ராஜா என்பவர், ஆபாசமான வார்த்தைகளில், ஒருமையில் திட்டியபடி, பாலனின் நெஞ்சு மீது தாக்குதல் நடத்தி, அவரது கையில் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு, காட்டு விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் ஏ.ஜி.பாலனையும், கடையில் வேலை செய்யும் ரவிச்சந்திரன் என்பவரையும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வாகனத்தில் ஏற்றி சென்று, விடிய, விடிய சித்திரவதை செய்துள்ளனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஏ.ஜி.பாலனின் மனைவி சரண்யா, விடிய, விடிய மேற்கு காவல்நிலையம், பட்டீஸ்வரம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என பல இடங்களிலும் கணவரையும், கடைப் பணியாளரையும் தேடி அலைய விடப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை நேரத்தில் உடல் நலிந்து, மோசமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஏ.ஜி.பாலனுக்கு சொந்தமான உணவகம் இருந்த பாதையிலும், அக்கம் பக்கம் இருந்த கடைகளிலும் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகி இருக்கும் என்பதால், அவை அனைத்தையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதிகார ஆணவத்தில், அத்துமீறி அட்டூழியம் புரிந்துள்ள கும்பகோணம் காவல்துறையின் சட்ட விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஏ.ஜி.பாலன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உட்பட தொடர்புடைய காவல் துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று முத்தரசன் கூறியுள்ளார்.