சீமான் செய்யாறு 
செய்திகள்

’கள்ளுல கலப்படம் இல்லையே’ - செய்யாறு நீதிமன்றத்தில் சீமான் கலகல!

Staff Writer

அவதூறு பேசிய வழக்கில் நா.த. கட்சித் தலைவர் சீமான் செய்யாறு குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்று முன்னிலையானார். 

கடந்த 2022ஆம் ஆண்டில் பிரம்மதேசம் எனும் இடத்தில் இராசேந்திர சோழன் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அவர், அவதூறாகவும் சில வாசகங்களைக் குறிப்பிட்டார். அதையெதிர்த்து அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் இன்று செய்யாறு நீதிமன்றத்தில் முன்னிலையானார். 

அப்போது, கள் இறக்கும் போராட்டம் நடத்துவதற்கான அமைப்பின் நிருவாகி ஒருவர், சீமானிடம் ஆதரவு கேட்டார். அப்போது, கள்ளுல எதுவும் கலப்படம் இல்லையே என ஆரம்பிக்க, அவரோ புரிதல் இல்லாம இப்படிப் பேசுறாங்க; விவசாயிக்குதான் தெரியும் கலப்படமா இல்லையானு என உடனே பதிலளித்தார். 

அருகில் இருந்த நா.த.க. நிருவாகி, அண்ணன் சொல்வதைக் கேளுங்க... என அவரை அமைதிப்படுத்தி, கள்ளில் கலப்படம் என அமைச்சர் பேசியதை சீமான் எதிர்மறையாகக் கிண்டலாகக் குறிப்பிடுகிறார் என விளக்கம் அளிக்க... பிறகுதான் அந்த பச்சைத் துண்டு விவசாயி சமாதானம் அடைந்தார். 

பின்னர், அவரிடம் சீமான் தங்கள் ஆதரவு உண்டு என்று உற்சாகப்படுத்திவிட்டு, நீதிமன்றத்துக்குள் சென்றார்.